Friday, July 18, 2014

SHIVA / ANNAPORANI NEAR KANDIYUR

அந்த திவ்ய பக்த தம்பதியர் திருமடத்தின் முன் நின்று பஞ்சாட்சரத்தை சொல்ல சோற்றுத்துறையே நெக்குருகி நின்றது. ஒப்பிலா சோற்றுத்துறையனை, அடிமுடி காணா சிவநேசனை தம் மனச்சிறைக்குள் முடிந்து வைத்த தம்பதியர், நோக்கிய இடமெல்லாம் நாதனின் திருவுருவே எனும் இணையிலா நிலையில் ஒருநிலையாக நின்றனர். நாளும் அடியார்களுக்கு அன்னமிடும் வேலையே தாம் வையம் புகுந்ததின் பேறு என்று இனியர்களாக விளங்கினர். விரித்த கைகளில் எதுவுமற்று, இருப்பதெல்லாம் ஈசனுக்கே என ஈந்து ஈந்து உய்வுற்றனர். ஈசன் இன்னும் அவ்விருவரின் மகோன்னதத்தை மூவுலகும் அறியும் வண்ணம் விளையாடத் தொடங்கினார்.

ஆதவனை ஆதிசிவன் பார்க்க அவன் இன்னும் பிழம்பானான். தன் பிரகாசத்தை அப்பிரதேசம் முழுதும் பரப்பினான், சோற்றுத்துறையில் தீத்தாண்டவமாடினான். வருணன் வராது சோம்பிச் சிறுத்து மறைந்திருந்தான். ஆளுயர செந்நெற்கதிர்கள் கருகி அங்குலமாக குறுகி மக்கி மண்ணாகிப் போயின. பூமி பிளந்து நீரில்லாது வறண்டது. அடியார்கள் ‘சோழநாடே சோறுடைத்து என்பார்களே, வயல் வெளிகளெல்லாம் வாய்பிளந்து கிடக்கும் அவலமென்ன’ என கைதொழுது நின்றழுதனர். அருளாள தம்பதியர் தவித்தனர். நெற்கிடங்கு வெறுமையாவது கண்டு மனம் குமைந்தனர். தாங்கள் அன்னம் ஏற்காது போயினும் பரவாயில்லை, இறையடியார்கள் இன்னமுது செய்ய வேண்டுமே என கவலையில் தோய்ந்தனர். 

காலம் அதிவேகமாகச் சுழன்றது. சமையல் கலன்கள் காலிப் பானை களாயின. சோற்றுத்துறையே சோறுக்காக அலைந்தது. அருளாள தம்பதியர் மெய்வருந்தி, சோறுண்ணாது, துறையுள் உறையும் ஈசனின் சந்நதியே கதி என்று கழித்தனர். ராப்பகல் அறியாது கண்கள் மூடி தவமிருந்தனர். தீந்தவம் சுட்டெரிக்கும் சூரியனையே உரச, ஆதவன் ஓடி ஒளிந்தான். கயிலைநாதன் தம் அருட் கண்களை விரித்துப் பார்த்தான். குடம் குடமாக அரனின் அருளை கொட்டித் தீர்த்தான். அவ்விரு அடியார்கள் முன்பு எடுக்க எடுக்க குறையாத அட்சய பாத்திரத்தை அவர்கள் முன் பரப்பினான், சோற்றுத்துறை சிவபெருமான். அன்னத்தை அட்சய பாத்திரம் பொங்கிப் பொங்கித் தந்தது. அந்த ஓதனத்தை சுரந்தது. 

அருளாள தம்பதியர் ‘ஓதன வனேசா... ஓதனவனேசா...’ என சொல்லி ஆனந்தக் கூத்தாடினர். (ஓதனம் என்றால் ‘அன்னம்’ என்பது பொருள்) மறைந்திருந்த வருணன் அதிவேகமாக வெளிப்பட்டான். அடை மழையால் ஆறுகளும், தடாகங்களும் நிரம்பி வழிந்தன. இயற்கை பொய்த்தாலும் தன் தாள் பணிய அரனின் அருள் துணை நிற்கும் என அந்த திவ்ய தம்பதியை முன்னிறுத்தி விளை யாடினார். அன்றி லிருந்து அட்சய பாத்திரம் கடலாகப் பொங் கியது. அவ்வூரை நெருங்கியோரை வயிறு நிறையச் செய்தது. 

சோற்றுத்துறைக்கு சிகரம் வைத்தாற் போல இன்னொரு விஷயமும் நடந்தேறியது. தவத்தில் ஆழ்ந்திருந்த கௌதம மகரிஷி சட்டென்று கண்கள் திறந்தார். தம் அகம் முழுவதும் சுயம்பு மூர்த்தியாக ஜொலித்த ஓதன வனேஸ்வரரைக் கண்டார். தாம் அங்கு அழைக்கப்படுவதை உணர்ந்தார். அடியார்களோடு சோற்றுத்துறையை விரைவாக நெருங்கினார். அருளாள தம்பதி, ஊராரோடு திரண்டு நின்று கௌதமரை கைதொழுது வரவேற்றனர். ஓதனவனேஸ்வரர் முன்பு திருமடம் அமைத்தார், முனிவர். அருளாள தம்பதி பற்றி ஊர் மக்கள் நெகிழ்ச்சியாகக் கூற உளம் குளிர்ந்தார். அவ்வழியையே எனைத் தொடரச் சொல்லி ஈசன் என்னை இங்கு இயக்கினான் என்று கூறினார். ஈசன் இன்னும் ஒருபடி மேலே போய் அவ்வூரையே சோற்றுக் கடலில் ஆழ்த்திவிடக் கருதினார். 

அதை அறிந்த கௌதமர் வயல்வெளிகளை தமது அருட் கண்களால் துழாவினார். செந்நெற்கதிர்கள் சட்டென்று வெடித்தன. நெல்மணிகள் வெண்முத்துச்சரமாக, பொங்கிய சோறு அன்றலர்ந்த மல்லிகையாக மாறியிருப்பதைப் பார்த்த அடியார்களும், பக்தர்களும் ‘நமசிவாய... நமசிவாய...’ என விண்பிளக்க கோஷ  மிட்டனர். ஈசனின் பேரணை யாலும், கௌத மர் எனும் மகா குருவின் அண்மை யாலும் அவ்வூர் வள மாகத் திகழ்ந்தது. அதேநேரம், திருமழபாடியில் திருநந்திதேவரின் திருமண ஏற்பாடுகளில் தேவாதி தேவர்களும், கந்தர் வர்களும், ரிஷிகளும், சாமான்ய மனிதர்களும் கலந்து கொண்டனர். 

பூந்துருத்தியிலிருந்து மலர்கள் குவிய, வேதிக்குடியிலிருந்து வேதியர்கள் கூட்டம் கூட்டமாய் வர, சோற்றுத்துறையிலிருந்து அன்னம் குன்றுகளாக குவிக்கப்பட்டது. சோற்றுத்துறை நாதனின் அருள் மணம் அன்னத்தோடு இயைந்துக் குழைந்தது. அமுதமாக ருசித்தது. உண்டோர் பெரும்பேறுற்றனர். திருச்சோற்றுத்துறை சுடர்விட்டுப் பிரகாசித்தது. திருச்சோற்றுத்துறை, அழகிய கிராமம். நான்கு வீதிகளோடும், இரு பிராகாரங்களோடும் கிழக்குப் பார்த்த கோயில் இன்னும் எழிலாக்குகிறது. புராணப் பெருமையும், வரலாற்றுப் புகழும் கொண்ட திருச்சோற்றுத்துறைக் கோயில் இருதளக் கற்றளியாக சதுர விமானமுடன் எடுப்பித்திருக்கிறார்கள். முதலாம் ஆதித்த சோழன் திருப்பணி புரிந்திருக்கிறான். 

ராஜராஜ சோழனின் 15-ம் ஆட்சியாண்டின் போது அளிக்கப்பட்ட நிவந்தங்களை கல்வெட்டுகள் அழகாகப் பகருகின்றன. மேலும், நுளம்பர் காலக் கலைப்பணியை கண்ணுறும்போது இத்தலத்தின் தொன்மை பிரமிப்பூட்டுகிறது. கோயிலின் வாயிலிலிருந்து நேரே உள்ளே நகர கரு வறைக்கு அருகே கருணை கொப்பளிக்கும் முகத்தோடு அருளாள தம்பதி அமர்ந்திருக்கிறார்கள். அடியார்களுக்கும், தம்மை நாடியவர்களுக்கும் அன்னமிட்ட அந்தக் கைகளை ஆதரவாகப் பிடித்து தம் பக்கத்தில் அமர்வித்துள்ளார் ஓதனவனேஸ்வரர். அன்னத்தோடு அரனின் அருளையும் பிசைந்திட்டு பெரும்பேறளித்த அவர்கள் முகம் இன்னும் மலர்ச்சியாக அருகே வருவோரைக் கண்டு ‘அமுது செய்தீரா...’ என உதடு பிரித்துக் கேட்பதுபோல் உள்ளது. 

அதற்கு அருகேயே கௌதம மகரிஷி நின்ற கோலத்தில் கைகூப்பி ஈசனை வணங்கும் காட்சி பார்ப்போரை நெக்குருகச் செய்கிறது. இத்தலத்திலேயே தன் ஆசிரமம் அமைத்து ஓதனவனின் மேன்மையை ஓயாது சொன்னவர் இவர். முப்பெருஞ்சுடருக்கு மத்தியில் பெருஞ்ஜோதியாகத் திகழ்கிறார் ஓதனவனேஸ்வரர் எனும் தொலையாச் செல்வர். சமயக்குரவர் மூவர் பாடி பரவசமடைந்த தலம் இது. தில்லைக்கூத்தன் ஜடாபாரம் அலையப் பெருநாட்டியமாட சிரசில் பொங்கிய கங்கையின் துளிகள் பாரெங்கும் சிதறின. அவை பூமியில் பூவாக பூத்து லிங்கமாக மாறியது. இவற்றையே சுயம்புலிங்கங்கள் என்பார் ஆன்றோர்கள். அப்படித் தெறித்து வீழ்ந்து பொங்கிய சுயம்பு லிங்கத்தில் திருச்சோற்றுத்துறையும் ஒன்று. 

வறுமை அழித்து, பசிப்பிணி தகர்ப்பதில் இத்தல நாயகன் முதன்மையானவன். நேர்த்தியான வடிவமைப்போடு திகழும் அழகுப் பிராகாரம். கருவறைக் கோஷ்டங்களில் தென்முகக் கடவுள் கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து அமைதி தவழும் முகத்தோடு அருள்பாலிக்கிறார். திருமால் நின்று வழிபட்டதால் பிராகாரத்தில் நாராயணப் பெருமாள் விளங்குகிறார். அதேபோல உட்பிராகாரத் தில் அழகிய ஐயனார் சிலையும், தனிக்கோயில் மகாலட்சுமியும், பஞ்சபூத லிங்கம் என அழகே அணிவகுத்து நிற்கின்றனர்.  

கோயிலின் வெளிப்பிராகாரத்தில் அம்பாள் தனிச் சந்நதியில் வீற்றிருக்கிறாள். எழில் கொஞ்சும் தென்னந் தோப்பிற்கு நடுவே நின்றிருக்கிறாள் அன்னை. சோறூட்டும் அன்னையாதலால் இவள் ‘அன்ன பூரணி’யெனும் நாமத்தோடு திகழ்கிறாள். நெடிய திருமேனி கொண்டவள், குளிர் பார்வையால் மனதை நிறைக்கிறாள். கண்கள் மூடி கரம் குவிக்க வாஞ்சையோடு பார்க்கும் நாயகி. அன்னபூரணி அன்னம் மட்டுமல்லாது வாழ்வின் அனைத்தையும் அளிக்கும் பூரண சொரூபி. பசிப்பிணி தாண்டி பிறவிப் பிணியை அறுப்பவள் இவளே. இத்தலம் தஞ்சாவூருக்கு அருகேயுள்ள திருக்கண்டியூரி லிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home